தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடந்து முடிந்தது. மாநாட்டில், தன்னுடைய கொள்கைகள், செயல்திட்டங்கள், அரசியல் எதிரிகள், ஆட்சியில் பங்கு ஆகியவை குறித்து விஜய் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து, கலவையான விமர்சனங்கள் விஜய் மீது முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “விஜய் தன் நண்பர்கள் யார் யார் என அடையாளம் காட்டுவதைவிட தன்னுடைய எதிரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும் ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும் கூறினார். பிளவுவாத சக்திகள் என்று சொல்கிறபோது குறிப்பிட்டு இந்த கட்சிதான் இந்த அமைப்புதான் என்று அடையாளப்படுத்தவில்லை.
பிளவுவாத கட்சிகளை எதிர்ப்போம் என்று மேம்போக்காகச் சொல்வதில் முரண்பாடு தெரிகிறது. பெரும்பான்மைவாதத்திலும் உடன்பாடு இல்லை சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால் பெரும்பான்மைவாதத்திற்குத் துணை போகிற ஒரு நிலைப்பாடாக அது அமைந்துவிடும். அப்படியென்றால் இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சமணம் போன்ற சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பு குறித்து அவர் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்று நம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அது ஒரு குழப்பமான நிலையாக இருக்கிறது.
அவரது உரையில் அதிகம் தி.மு.க எதிர்ப்பு நெடி வீசுகிறது. குடும்ப அரசியல் என்ற அடிப்படையில் கலைஞரின் குடும்பத்தை எதிர்க்கிறார். அவரது ஒட்டுமொத்த உரையின் சாராம்சமும் தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி அரசு எதிர்ப்பாக இருக்கிறது. விஜய்யிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள், கொள்கைகள், செயல் திட்டங்கள் இல்லை.” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, ஆட்சியதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியிருப்பது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், “இது தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சி. உண்மையில் அதிகாரப் பகிர்வை அளிப்பதாக இருந்தால், இதனை மறைமுக செயல்திட்டமாகக் கையாண்டிருக்க வேண்டும். எந்தெந்த கட்சிகள் இதை ஏற்று வருவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, அவர் எதிர்பார்த்த விளைவை இது ஏற்படுத்தாது. அணுகுண்டை யுத்த களத்தில் வீசுவதற்குப் பதில் காலியிடத்தில் வீசியிருக்கிறார். அது அவருக்கெதிராக வெடிக்கும் நிலையை இந்த அறிவிப்பு உருவாக்கியிருக்கிறது.” என்று கூறினார்.
த.வெ.க குறித்தும் விஜய் பேச்சு திருமாவளவன் தெரிவித்திருப்பது பற்றிய உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்
Discover more from தமிழ் செய்திகள்
Subscribe to get the latest posts sent to your email.