விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கைப் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சொல்லிசைக் கலைஞர் அறிவு எழுதியிருக்கும் அந்த பாடலின் காணொளியில் பகவத்கீதை, குரான் மற்றும் பைபிள் தவிர இன்னும் சில புத்தகங்களும் இடம்பெற்று இருந்தன. அது என்னென்ன புத்தகங்கள்? அதில் சொல்ல வரும் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்..
இனி வரும் உலகம் – தந்தை பெரியார்
ஆங்கிலத்தில் – The World To Come
1943-ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்ச்சியில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவினை, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அறிஞர் அண்ணா, முழுமையாகக் குறிப்பெடுத்து, எழுதிப் பெரியாரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்று உரையாக வெளியிட்டார். பின்னர் அது ‘இனி வரும் உலகம்’ என்ற பெயரில் சிறுநூலாக வெளிவந்தது. அந்த காலத்திலேயே புத்தகத்தின் அட்டைப்படத்தில் சோதனைக்குழாயில் ( Take a look at tube) குழந்தை வளர்வது போல வடிவமைத்திருந்தார் பெரியார்.
அந்த நூலில் ‘மிகப் பெரிய அறிவாற்றல் நம் மக்களுக்கு இருந்தும், அது ஏன் அனைவருக்கும் பயன்படும் அறிவியல் சாதனமாக மாறவில்லை’ என்கிற ஆதங்கத்தைப் பெரியார் முன்வைத்திருப்பார். நாம் அறிவை அறிவியல் வழியில் பயன்படுத்தினால் வருங்காலத்தில் என்ன நடக்கும், வருங்காலத்தில் வரப்போகும் கண்டுபிடிப்புகள் என்ன? அதனால் நடக்கப் போகும் வளர்ச்சி என்னவென்று பேசியிருப்பார். 1943-ம் ஆண்டிலே அவர் கூறிய சில முக்கியமான விஷயங்களை காணலாம் …
- போக்குவரத்து ஆகாய மார்க்கமாக இருக்கும் மற்றும் அதிவேக சாதனங்களாகவே இருக்கும்.
- தந்தியில்லாத கம்பி சாதனம் அனைவரது சட்டைப் பையிலும் இருக்கும். (மொபைல் போன் கண்டுபிடித்த ஆண்டு – 1973)
-
வானொலி ஒவ்வொருவரின் தொப்பியிலும் (காதிலும்) இருக்கும்
-
ஒருவருக்கு ஒருவர் முகம் காட்டி பேசிக் கொள்ளக் கூடிய கம்பி இல்லா சாதனம் உண்டாகும். (வீடியோ கால் கண்டுபிடித்த ஆண்டு – 1968).
-
அதே வசதி கொண்டு பாடம் கற்பிக்க முடியும் (ஆன்லைன் கிளாஸ்)
-
ஆண் பெண் துணையில்லாமலே குழந்தைகள் பிறக்கும். (முதல் டெஸ்ட் டியூப் பேபி பிறந்த ஆண்டு -1978 )
-
பெட்ரோலுக்கு பதில் மின்சார கார்களை பயன்படுத்துவார்கள்
இவையெல்லாம் பெரியார் அறிவியல் வளர்ச்சியை மனிதர்களின் அறிவின் வளர்ச்சியை வைத்துக் கணித்தவை. மேலும் கண்டுபிடிப்புகள் அல்லாமல் வேறு சிலவற்றையும் கூறினார். அது
- அரசாங்கம் இருக்காது
-
ராணுவம் இருக்காது
-
பசி பட்டினி இருக்காது
-
மக்கள் சுயநலமின்றி தனக்கு வலிக்கிறது என்று கூறாமல் பிறருக்கு வலிக்கும் என்ற எண்ணம் கொள்வர்
என்றார். இவை அனைத்தையுமே நான் சிந்திக்கும் பகுத்தறிவின் தன்மை வைத்தே கூறுகிறேன். யூகம், ஜோசியம் ஆகிய மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அல்ல என்று கூறும் பெரியார், பழமையை விட்டு புதியதோர் உலகைப் படைக்க அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பார்.
சாதியை அழித்தொழித்தல் / சாதியை அழித்தொழிக்கும் வழி ஆங்கிலத்தில் – Annihilation of Caste
அம்பேத்கதை அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள உதவும் மிகவும் முக்கியமான நூல் இது. அம்பேத்கர் ‘என்னை ஒருபோதும் இந்து என்று அழைத்துக்கொள்ளும் ஒருவனாக இறக்கமாட்டேன்’ என்று பிரகடனப்படுத்திய இயோலா மாநாட்டுக்குப் பின்னர் எழுதிய புத்தகமே ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’. பஞ்சாபில் செயல்பட்டு வந்த ஜாத் பட் தோடக் மண்டல் (Jat Pat Todak Mandal- இந்து சமூக சீர்திருத்த அமைப்பு) 1935-ம் ஆண்டு தனது வருடாந்திரக் கூட்டத்தில் அம்பேத்கரைத் தலைமை உரை நிகழ்த்த அழைத்திருந்தது. பேசப்போகும் உரையின் ஒரு பிரதியை அவர்களுக்கு முன்னரே அனுப்பி வைத்தார் அம்பேத்கர். அதிலிருக்கும், “இந்து மதத்தை அழிக்க வேண்டும், இந்து மதத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும்” என்கிற நோக்கில் எழுதப்பட்ட இரு பத்திகளை நீக்க வேண்டும் என்றனர் அமைப்பினர்.
அதிருப்தி அடைந்த அம்பேத்கர் ஒரு வார்த்தையைக் கூட திரும்பப் பெற இயலாது என்று மறுத்து கடிதம் எழுதினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுமில்லை. ஆதலால் அந்த உழைப்பை வீணாக்க விரும்பாத அம்பேத்கர், பொதுமக்கள் வாசிக்கும் பொருட்டு தனது செலவிலேயே ‘Annihilation of Caste’ என்று தலைப்பிட்டு புத்தகமாக அதை வெளியிட்டார். மக்களிடையே அது பெரும் வரவேற்பு பெற்றது. வெளிவந்த இரண்டு மாதத்தில் 1500 பிரதிகள் விற்றுத் தீர்த்தன. காந்தி தனது ‘ஹரிஜன்’ பத்திரிக்கையில் இந்த புத்தகத்துக்கு எதிராக எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக இரண்டாம் பிரதியை அடுத்த ஆண்டு வெளியிட்டார். அது தமிழ், குஜராத்தி, மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பெரியாரின் முயற்சியால் இந்த புத்தகம் 1936-ம் ஆண்டு குடியரசு இதழில் தமிழில் வெளியானது.
இந்தப் புத்தகத்தில் இந்தியச் சமூக கட்டமைப்பு எப்படி சாதிய ஏற்றத்தாழ்வுகளுடன் படிநிலைகளாக (Graded inequality) இருக்கிறது என்று விவரிக்கும் அம்பேத்கர் ‘சாதி இந்துக்களை விட்டு ஏன் விலகி நிற்கிறேன்’ என்பதை முதன்மையாகப் பேசியிருக்கிறார். அதேபோல தீண்டப்படாத மக்களுக்கு நடக்கும் கொடுமைகள், உண்மைச் சம்பவங்களை விவரித்து இந்தியாவின் அதிகாரம் மதத்தின் அடிப்படையில் அமைகிறது என்று பேசியிருப்பார். சாதி, ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களை சமூக ரீதியாக எப்படிப் பிரிக்கிறது, அதேநேரத்தில் சாதி அமைப்புக்கு அறிவியல் சாயம் எப்படிப் பூசுகிறார்கள், நான்கு வருணம் எப்படி நாலாயிரம் சாதிகள் உருவாக்கியது என்ற நீண்ட விவாதங்களை எடுத்து வைத்திருப்பார்.
சீர்திருத்தங்களை முன்னிறுத்திப் பேசும் அம்பேத்கர், ‘யார் ஒடுக்குகிறார்களோ’ அவர்கள் மனமாற்றம் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை அதிகமாக விவாதித்திருப்பார். பிளாட்டோ, காரல்மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்களைக் கேள்வி கேட்டு, “இந்தியா வர்ணாசிரம தர்மத்தை வேரோடு பிடுங்க என் வழியில் வாருங்கள்” என்று அறைகூவல் விடுத்திருப்பார். ‘நிலையானது, நிரந்தரமானது, சனாதனமானது என்று எதுவும் இல்லை. எல்லாமே மாறிக் கொண்டு இருக்கின்றன. சமூகமானாலும் சரி, தனிமனிதர்கள் ஆனாலும் சரி, மாற்றம் என்பதே வாழ்க்கையின் நியதி’ என்று பழமையான சாதிய முறையை எப்படி ஒழிப்பது எனப் புத்தகம் நெடுக தனது ஆழமான கருத்துக்களை விட்டுச் சென்றிருப்பார். சாதியின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் புரிந்துகொள்ள அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அற்புதமான படைப்பு இது.
பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார் Why have been ladies enslaved?
தலைப்பிலே கேள்விக்குறியுடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 98 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்றும் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே தான் இருக்கிறது. ‘பெண்ணியத்தின் பைபிள்’ என்று சொல்லப்படக் கூடிய ‘சிமோன் டீ புவார்’ என்கிற பிரஞ்சு எழுத்தாளர் எழுதிய ‘The Second Sex’ வெளியாகுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான இந்தக் கட்டுரைகள், அந்தப் புத்தகத்தின் கருத்துக்களைத் தாங்கி வந்தது பெரிய ஆச்சரியமாக இன்றும் பார்க்கப்படுகிறது. இந்த புத்தகத்தை பெரியாரை ஏன் ‘கடவுள் மறுப்பு’ என்கிற எல்லைக்குள் சுருக்கக் கூடாது என்பதற்கான மற்றொரு சான்றாகவும் பார்க்கலாம்.
சாதி, மதம், இனம் என எந்த வேற்றுமைக்கு எதிராகப் போராடினாலும் பெண் விடுதலை பேசாவிட்டால் அந்த நோக்கத்தை அடைய இயலாது என்பதை அடிநாதமாக வைத்துப் பல தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் பெரியார். மற்றவர் வாழ்க்கைக்குத் தீர்ப்பு எழுதும் சமூகத்தைக் கேள்வி கேட்கும் இந்த புத்தகம் கற்பு, காதல், திருமணம், மறுமணம், சொத்துரிமை ஆகியவற்றுக்கு சமூகம் கற்பித்திருக்கும் புனித பிம்பங்கள் மீது கேள்விகளை முன்வைத்திருக்கும்.
பெண்கள் தங்களை அடிமையாகப் படைத்ததாக எண்ணத்தை விட்டுவிட்டு ஆண்களுக்குச் சமமானவர்கள் என்ற எண்ணத்தை எடுக்க வேண்டும், கற்பு என்பது இருபாலினத்தவர்களுக்கும் பொதுவானது, காதல் ஒரு முறை வரும் விஷயம் கிடையாது, ஒருமுறை வந்த பின்னர் அந்த நபரின் மீதே இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது, பெண்கள் மறுமணம் செய்யலாம் என்ற பல புரட்சிகர கருத்துக்களை முன்வைத்தன. பெண்கள் எவ்வாறு அடிமையாக்கப்பட்டார்கள், அடிமையானார்கள், அடிமையாக இருந்து வருகிறார்கள் என்ற நிதர்சனத்தைச் சொல்லும் பெரியார் அதை உடைத்து வெளிவர வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் நோக்கம் என்றிருப்பார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த புத்தகம் தேசம், மொழி கடந்து அனைவருக்கும் பொருந்தும் புத்தகமாக இருக்கிறது. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்பதே பெரியாரின் விருப்பம்.
இந்திய அரசியலமைப்பு – அண்ணல் அம்பேத்கர் (தலைமை)
THE CONSTITUTION OF INDIA
இந்தியாவின் முதல் சட்ட வரைவு பி.என்.ராவ் என்பவரால் வடிவமைப்பட்டது. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு, அந்த வரைவை மீண்டும் ஆய்வு செய்து புதிதாக ஒரு சட்ட வரைவினை 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தனர். அம்பேத்கரின் சட்ட வரைவுக்கும் பி.என்.ராவின் வரைவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. முதல் அரசியல் சட்டவரைவில் 7500 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன அதில் 2500 ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் 395 விதிகள், 8 அட்டவணைகள் கொண்ட திருத்தப்பட்ட அரசியல் அமைப்பின் சட்ட வரைவினை 1949 நவம்பர் 26 ஆம் நாள் சட்டசபையில் நிறைவேற்றினார் அம்பேத்கர்.
அரசியல் சாசனத்தைப் பற்றி அம்பேத்கர் பேசுகையில்,”இந்தியா வெறும் அரசியல் ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு, சமூக ஜனநாயகத்தையும் சாதிக்க வேண்டும்” என்றார். “சமூக ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களாக அங்கீகரிக்கிறது” என்று முன்மொழிந்தார். அரசமைப்பின் 17-வது பிரிவு தீண்டாமையைத் தடைசெய்கிறது. 30-வது பிரிவு சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்கிறது. அடுத்து கல்வி, வேலை மற்றும் சட்டமன்ற அமைப்புகளில் பின்தங்கிய குழுக்களுக்கு ஒதுக்கீடுகளை உள்ளடக்குகிறது.
மேலும் பெண்களுக்கு சம உரிமை அளித்து பாலின பாகுபாட்டைத் தடுக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு மூலம் பின்தங்கிய குழுக்களுக்கு நலத்திட்டங்களை உள்ளடக்குகிறது. மத சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு குடிமை சுதந்திரங்களை உறுதி செய்கிறது. மேலும் சட்ட மற்றும் நிர்வாக அதிகாரங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பிரிக்கப்படுகின்றன. இன்றும் சமுகத்தின் விளிம்புநிலை மக்களின் கடைசி அடைக்கலமாக, ஆதரவாக அரசியலமைப்பே இருக்கிறது.
மதம் சார்ந்த புனித நூல்களை தவிர்த்து விஜய் பயன்படுத்தியிருக்கும் இந்த நான்கு நூல்களும் பகுத்தறிவு, பெண் உரிமை, சமூகநீதி, பாலின சமத்துவம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற கோட்பாட்டுகளை ஆதரித்துப் பேசுகின்றன.
Discover more from தமிழ் செய்திகள்
Subscribe to get the latest posts sent to your email.