அரசு துறைகளில் பணியாற்றுவோரை பழிவாங்க நினைக்கும் உயரதிகாரிகளில் வெகுசிலர், ‘உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாற்றி விடுவேன்!’ என அச்சுறுத்துவதுண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அப்படி அச்சுறுத்தக்கூடிய பணியிடமாக வெகுகாலமாக ராமநாதபுரம் மாவட்டத்தைத் தான் குறிப்பிடுவதுண்டு. தற்போது அந்த இடத்தை, கள்ளக்குறிச்சி மாவட்டம் வசப்படுத்தி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது.
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1992-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதன்பின் 2019-ம்ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக உருவானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்ததே. இம்மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தால், மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. நடப்பாண்டு ஜூன் மாதம், கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்து கள்ளச்சாராயத்தை அருந்தி 69 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை கள்ளச்சாராயத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதியில் தொழில் வளத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லாததால் அங்கு இருப்பவர்களில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தொழிலாகக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் இந்த மலைவாழ் மக்களுக்கு ஆதார் கார்டு, குடும்ப அட்டை, போக்குவரத்து வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரிவர செய்து தராமல் இருப்பதாக கருதும் சென்னை உயர் நீதிமன்றம், கல்வராயன்மலையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பான விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளது. இப்பகுதி வளர்ச்சி தொடர்பாக தலைமைச் செயலாளரிடமும் சில கேள்விகளை முன்வைத்துள்ளது.
கள்ளச்சாராய சம்பவத்துக்குப் பின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சார்ந்து மேற்கொள்ளப்படும் பணிகளை நீதிமன்றம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பதால், அரசு ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கைகள் பாய்கின்றன.
“அரசியல் குறுக்கீடு அதிகரித்ததன் விளைவு தான், மாவட்டம் கரும்புள்ளி மாவட்ட நிலைக்கு மாறியிருக்கிறது” என்று இங்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்களது உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். சில கூட்டுறவுத் துறை ஊழியர்கள் கூறும்போது, “இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருப்பவரின், உதவியாளர் ஒருவரின் நேரடி தலையீடு அதிகமாக உள்ளது. உயர் நீதிமன்றம் மாவட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட, நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் பணி நியமனத்தில் தான் சொல்லும் நபரை தான் நியமிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கிறார்” என்று தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று இம்மாவட்டம் தொடங்கியது முதலே, எம்எல்ஏ-க்களின் தலையீடும் அதிகம் இருப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். “கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு பின் இது சற்றே குறைந்திருக்கிறது. ஆனாலும் கல்வராயன் மலையில் எம்எல்ஏ-வின் தலையீட்டால், நாங்கள் தான் சிக்கலுக்கு ஆளாகி வருகிறோம். ஒவ்வொரு முறையும் அவரது நிர்பந்தம் அதிகமாக உள்ளது. மேலிடத்தில் நான் பேசுகிறேன்” என்று வருத்தம் பட தெரிவிக்கிறார் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்.
இதுபோன்ற சிக்கல்களால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மாறுதலாகி வர அரசு ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதுதொடர்பாக வருவாய்த்துறை அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காதர் அலியிடம் கேட்ட போது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணி செய்ய அரசு ஊழியர்களிடத்தில் அச்சம் நிலவுவது உண்மையே. ஊழியர்கள் மட்டுமின்றி, அதிகாரிகள் மட்டத்திலும் இங்கு வந்து பணிபுரிந்தால், அதை தண்டனைக்குரிய பணிக்காலமாக நினைக்கின்றனர்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டத்தில் கட்டமைப்பு வசதிகள் இன்னும் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. முக்கியத் துறையின் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. அதற்கு மத்தியில் சில விரும்பதகாத சம்பவங்கள் நடக்க, நிர்வாகச் சிக்கல் மேலும் அதிகரித்து, அரசு ஊழியர்களை இத்தகைய ஒரு மன ஓட்டத்துக்கு தள்ளியிருக்கிறது. அரசியல் குறுக்கீடு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்கிறது.
அங்கெல்லாம் அரசு ஊழியர்களுக்கான அழுத்தங்கள் இருந்தாலும், அது பணிவான முறையிலும், மரியாதையுடன் கூடிய அணுகுமுறையாகவும் உள்ளது. ஆனால், இங்கு தனிப்பட்ட முறையில் மிரட்டுவது போன்ற விரும்பத்தகாத செயல்கள் இருப்பது, இந்த மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்திடம் இதுதொடர்பாக பேசியபோது, “வெளியில் இருந்து பார்க்கும் போது இப்படியான ஒரு தோற்றம் ஏற்படும். புதிதாக உருவான மாவட்டம் என்பதால் கூடுதல் பணிச்சுமை இருக்கிறது. அதனால் இங்கு வர தயங்கலாம். நான் இங்கு பணிப்பொறுப்பேற்றது முதல் எனக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. யாரும் என்னை நிர்ப்பந்திக்கவும் இல்லை. என் பணிகளில் எவர் குறுக்கிட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டேன்” என்று தெரிவித்தார். அதிகாரிகள் மட்டத்திலும் இங்கு வந்து பணிபுரிந்தால், அதை தண்டனைக்குரிய பணிக்காலமாக நினைக்கின்றனர்.
Discover more from தமிழ் செய்திகள்
Subscribe to get the latest posts sent to your email.