நடப்பாண்டு கோவையில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இப்பட்டாசுக்கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் பட்டாசு கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக இல்லை. அதேசமயம், இன்று (அக்.29) பட்டாசுக் கடைகளில் வியாபாரம் தீவிரமாக இருந்தது. குறிப்பாக, மாலை முதல் இரவு வரை பட்டாசுக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சில பெற்றோர் தங்களது குழந்தைகளையும் உடன் அழைத்து வந்து பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.
விற்பனை குறித்து பட்டாசு வியாபாரிகள் கூறியதாவது: சிறுவர்கள், குழந்தைகள் பேன்சி வகை பட்டாசுகளை அதிகம் வாங்கிச் செல்கின்றனர். அதேசமயம், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் அதிகளவில் வெடி வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இன்று பட்டாசு விற்பனை பரபரப்பாக இருந்தது. பல்வேறு நிறங்களில் புகை வெளியே வரும் கிரிக்கெட் பேட் மற்றும் கிரிக்கெட் பந்து வடிவில் வந்துள்ள பேன்சி பட்டாசு, டிரோன் கேமரா பட்டாசு, பீக்காக் வகை பட்டாசு, போட்டோ ஃப்ளாஸ் பட்டாசு, செல்பி ஸ்டிக் பட்டாசு, கலர் புகை வரும் பட்டாசு போன்றவை அதிகளவில் சிறார்கள், இளைஞர்கள் வாங்கிச் செல்கின்றனர். மேலும், புஸ்வானங்கள், சங்கு சக்கரங்கள், சாட்டை உள்ளிட்டவையும் சிறார்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். வெடி வகைகளி்ல், ஆயிரம் வாலா உள்ளிட்ட சரவெடி வகைகள், டிரிபிள் சவுண்ட் ராக்கெட் போன்றவைகளை அதிகளவில் இளைஞர்கள், பெரியவர்கள் வாங்கிச் செல்கின்றனர். நாளை விற்பனை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10 முதல் ரூ.2,500 வரை வரை பேன்சி பட்டாசுகள், வெடி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.