மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய் அவரது கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் குழப்பான நிலையில்தான் இருக்கிறார். தேசமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என சொல்லியிருந்தால் வரவேற்றிருப்போம். திராவிடம் – தமிழ் தேசியம், இருமொழிக் கொள்கை எனவும் சொல்லியிருக்கிறார். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருக்கின்றன. இருப்பினும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது செயல்பாடுகள் போகப் போகத்தான் தெரியும். அவரது கொள்கை, கோட்பாடுகள் தெளிவான பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் தெளிவான பாதையில் பயணிக்க விரும்பவில்லை என்பதையுமே காட்டுகிறது. திமுக, போலி திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் போலி திராவிட மாடல் ஆட்சியை அதிகமாக தாக்கியிருக்கிறார். குடும்ப அரசியல் பற்றியும் பேசியுள்ளார். குடும்ப அரசியல் நம் நாட்டிற்கு நல்லதல்ல. ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு பற்றி விஜய் பேசியுள்ளார். அந்த கொள்கையை பாஜக ஏற்கனெவே பின்பற்றி, முன் உதாரணமாகத் திகழ்கிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு கொடுக்கப்படுகிறது.
பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து மக்களின் உணர்வுகளோடு தமிழக அரசு விளையாடக்கூடாது. நரகாசுரனை அழித்ததையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதுபோல திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம். அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டியது அவரது கடமை. அதை தமிழக முதல்வர் செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.