சந்தைக்கு நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் அதிக அளவில் வருகை தருவர். இதுதவிர, தீபாவளி, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட விழாக் காலங் களையொட்டி கூடும் நல்லம்பள்ளி வாரச் சந்தைக்கு ஆடுகள் வாங்க மேலும் அதிக அளவிலானவர்கள் வருகை தருவர்.
அந்த வரிசையில், நேற்றைய நல்லம்பள்ளி வாரச் சந்தைக்கு அதிகாலை 4 மணி முதலே ஆடுகள் வரத்து தொடங்கியது. 5 மணியளவில் ஆடுகள் வர்த்தகம் விறுவிறுப் படைய தொடங்கியது. ஆடுகளின் எடைக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது. நேற்றைய ஆட்டுச் சந்தைக்கு சுமார் 2,000 ஆடுகள் வந்ததாகவும் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்ததாகவும் கால்நடை தரகு வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.
திருநெல்வேலி: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. திருநெல்வேலி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நேற்று அதிகாலையில் இருந்தே ஆடுகள் விற்பனை விறுவிறுப் பாக நடைபெற்றது. வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து இறைச்சி வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். ஆடுகள் அதன் தரத்துக்கு ஏற்ப ரூ.6 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளை சந்தைக்குள் கொண்டு வந்தவர்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டோக்கன்கள் மாநகராட்சியால் விநியோகிக்கப்பட்டன. சந்தையில் அதிக அளவில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழி, வான்கோழி, காடை போன்றவற்றை விற்பனை செய்ய கொண்டுவந்திருந்தனர். மேலப்பாளையம் சந்தையில் வழக்கமாக ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகி வரும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.3 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை: தீபாவளியை முன்னிட்டு, மதுரை வாடிப்பட்டியில் நேற்று நடந்த வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே தனியார் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமைதோறும் கூடுகிறது. இச்சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி, ஆடு, மாடு, கோழிகளும் விற்கப்படும். வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் இருந்தும், மதுரை, திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் வாரந்தோறும் இச்சந்தையில் கூடுகின்றனர்.
இந்நிலையில், தீபாவளிக்காக நேற்று கூடிய சந்தையில், ஆடுகள் விற்பனை களை கட்டியது. ஆயிரக் கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. குறிப்பாக, செம்மறி, மயிலம்பாடி, ஆந்திரா, கர்நாடகா வகை ஆடுகளும் அதிகஅளவில் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் 10 கிலோ எடை கொண்ட குட்டி ஆடுகள் ரூ.8 ஆயிரத்துக்கும், 25 கிலோ வெள்ளாடுகள் ரூ.15 ஆயிரத்துக்கும், 25 கிலோ கறுப்பு ஆடுகள் ரூ.20 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டன.
இதுபோன்று, அதிகளவில் சேவல், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. சேவல் ரூ.600-க்கும், நாட்டுக்கோழி ரூ.800-க்கும் விற்பனையானது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்த ஏராளமானோர் ஆடுகள், கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை நடந்ததாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருப்புவனம்: திருப்புவனத்தில் நடந்த ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தை நடக்கிறது. நாளை தீபாவளி என்பதால் நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். விலையும் அதிகரித்திருந்தது. 10 கிலோ ஆடு ரூ.10,000 வரைக்கும், 10 கிலோ கிடாய் ரூ.11,000-க்கும் விற்பனையாகின. அதிகபட்சம் ஆடு ஒன்று ரூ.37,000 வரை விலை போனது. இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘தீபாவளி வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்த தோடு, விற்பனையும் அதிகரித்தது. சந்தையில் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை ஆடுகள் விற்பனை யாகின’ என்று கூறினர்.