Climate
oi-Mani Singh S
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 1 ஆம் தேதி மற்றும் 2 ஆம் தேதி தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மழையோடு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், குமரி, மதுரை தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பியது.
வானிலை அப்டேட்: நேற்று முன்தினம் மற்றும் நேற்று தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் அடித்தது. எனினும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 29.10.2024 மற்றும் நாளை 30.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1 ஆம் தேதி: இதேபோன்று தீபாவளி அன்று 31.10.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு: இதேபோன்று 02.11.2024 அன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.11.2024 மற்றும் 04.11.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று 29.10.2024 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் தீபாவளி அன்று: சென்னையில் 31.10.2024 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சோழவந்தான் (மதுரை) தலா 4, சாத்தியார் (மதுரை), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 3, ஆண்டிபட்டி (மதுரை) 2, வாடிப்பட்டி (மதுரை), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மஞ்சளாறு (தேனி), நிலக்கோட்டை (சென்னை), குண்டாறு அணை (தென்காசி), உபாசி TRF AWS (நீலகிரி), திண்டுக்கல் (திண்டுக்கல்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி) தலா 1. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலை:- மதுரை விமான நிலையம் : 35.4° செல்சியஸ்.குறைந்தபட்ச வெப்பநிலை:- ஈரோடு: 18.4° செல்சியஸ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Discover more from தமிழ் செய்திகள்
Subscribe to get the latest posts sent to your email.