Climate
oi-Halley Karthik
சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் சுமார் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவகாற்று காற்று மழையை கொண்டுவரும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவக்காற்று தமிழ்நாட்டிற்கு பரவலாக மழையை கொடுத்தது. சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இப்படி இருக்கையில்தான் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இது தொடங்கிய உடனேயே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை குறி வைத்தது. அக்.1ம் தேதி தொடங்கி தற்போது வரை வடதமிழக மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, அக்.1 முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 28% அதிகமாக பெய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களில் மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மழை இல்லாமல் இருந்தது. இப்படி இருக்கையில் இன்று மதியம் 12 மணியளவில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது. குறிப்பாக அண்ணா நகர், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், அம்பத்தூர் என கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அல்லாமல், உள் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது.
மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறுகையில், “சென்னையில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது வழக்கமான நிகழ்வு அல்ல. சென்னையை கடந்து சென்ற மேகக்கூட்டங்களின் ஒரு பகுதி திடீரென மழையை கொடுத்திருக்கிறது. இது கனமான மேகம் என்பதால் மழை அதிகமாக பெய்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
சென்னை வானிலை மையமும், அண்ணா நகரில் 9 செ.மீ (90 மி.மீ) அளவுக்கு கனமழை பெய்திருப்பதாக கூறியிருக்கிறது. மேலும், நியூ மணலி டவுன், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீ மழை (60 மி.மீ) பதிவாகியுள்ளது என்று கூறியிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discover more from தமிழ் செய்திகள்
Subscribe to get the latest posts sent to your email.