சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்றும் (அக்.30) நாளையும் (அக்.31) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கருமேகங்கள் சூழ்ந்திருந்ததால், வாகன ஓட்டிகள் தங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை ஓட்டினர்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால், சாலையோர வியாபாரிகளும், பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளுக்குச் சென்ற பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், தி.நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர்,புரசைவாக்கம், சைதாப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, போரூர், மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அண்ணாநகர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் கனமழை பெய்தது. அண்ணா நகரில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 10.செ.மீ மழை பதிவானதாக கூறப்படுகிறது. புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.